வியாழன், 25 பிப்ரவரி, 2016

இந்தியாவில் படித்தவர்களுக்குப் பற்றாக்குறையா?


Image

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்




  • மருத்துவம் படிக்காத அனுபவ மருத்துவரிடம் நமக்கு மருத்துவம் செய்யப் போவோமா? போகமாட்டோம்! - காரணம் அவர் மருத்துவம் கல்லாதவர். அப்படியே அவர் மருத்துவம் செய்தாலும் அது தவறு என்று சொல்வோம்.

  • வழக்கறிஞர் பணிக்குப் படித்த ஒருவரை பொறியியல் பணிக்கு ஏற்றுக்கொள்வோமா? என்றால், ஏற்றுக்கொள்ளமாட்டோம். - காரணம் அவர் நீதித்துறைக்கு படித்தவர் பொறியியல் துறைக்கு ஏற்க முடியாது என்போம்.

  • கதை எழுதுபவரை மைக்ரோசாப்டில் கணினி நிரல் எழுத வைப்போமா? என்றால், கணினி நிரல் எழுத அதை பற்றிய பட்டப்படிப்பு அவசியம் என்போம்.

  • ஒன்றாம் வகுப்பில் தேறாத ஒருவரை கல்லூரி ஆசிரியராக ஏற்றுக்கொள்வோமா? என்றால், தகுதியில்லாததை பற்றி பேசவேண்டாம் என்போம்.
  • பேருந்து ஓட்டுனரை விமானத்தை ஓட்டச் சொல்லலாமா? என்றால் பேச்சுக்கு கூட ஒப்புக்கொள்ள மாட்டோம்.

இப்படி ஒவ்வொரு பணிகளையும் செய்வதற்கு

  • அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற (Expert)
  • அந்தப் பணியில் அனுபவம் பெற்ற (Experience)
  • அந்தத் துறைக்குப் படித்த (Department Oriented Study)
  • அதற்குத் தகுதியான கல்வியை பயின்ற (Qualification)
  • பன்முக திறன் கொண்ட (Multiple Skill)

மனிதர்களையே நாம் ஏற்றுக்கொள்வோம். இந்தத் தகுதிகளில் ஏதேனும் குறைகள் இருந்தாலே நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். பாத்திரத்தைக் கழுவும் வேலைக்குக் கூட அனுபவம், படிப்பு என்ன என்று கேட்கும் பழக்கம் உள்ளதை நாம் அறிவோம்.

ஆனால் நம்மையும், நாட்டையும் ஆளும் அரசியல் பணிக்கு மட்டும் படிப்பு என்பதே தேவையில்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலே சொன்ன சின்ன சின்ன எடுத்துக்காட்டுகளையே ஏற்கமுடியாத நம்முடைய மனம், நம்மையும் நம் நாட்டையும் ஒரு படிக்காத அரசியல் சமூகத்திடம் ஒப்படைத்து விட்டு மற்ற பணிகளுக்கான தகுதிகளைப் பற்றிப் பேச என்ன தகுதியுள்ளது. யாரை ஏமாற்ற நடிக்கிறோம்?. இந்தப் படிக்காத அரசியல் சமுகத்தை படிக்காதவன் ஏற்றுக்கொள்வதில் வியப்பில்லை. ஆனால் படித்தவர்களே இந்தச் சமுகத்தை ஏற்றுக்கொள்வது வியப்பிலும் வியப்பாக உள்ளது. இது இன்றோ நேற்றோ என்றில்லை பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் விந்தை. 
 அரசு பணிகளுக்கு கல்வி, தேர்வு, அனுபவம், திறன் என்பனவற்றை தகுதிகளாக சொல்லும்போது, அதே அரசு பணியான ஆட்சி அதிகாரத்தை ஆளவருவேருக்கு எந்த தகுதிகளும் தேவையில்லை என்பது பெரியக் கேலிக்கூத்து அல்லவா?. அரசு பணியான ஆட்சி அதிகாரத்தை ஆள்வதை பணி என்று அழைத்தால் தகுதி என்பதை பற்றி மக்கள் பேசுவார்கள் என எண்ணியே அந்தப் பணியை மக்கள் சேவை என மாற்றிவிட்டார்கள் நமது அரசியல் வியாதிகள். சேவைகளை செய்ய இவர்களுக்கு ஊதியம் வேறு? 
இ‌ந்‌திய ஆ‌ட்‌சி‌ ப‌ணிகளுக்கு ஒருவன் IAS படிக்க வேண்டும், கூடுதல் அனுபவம் வேண்டும். ஆனால் அந்தப் பணிகளை இயக்கும் தலைமை துறைக்குப் படிக்காத ஒரு மந்திரி போதும்.

இ‌ந்‌திய காவ‌ல் ப‌ணிகளுக்கு ஒருவன் IPS படிக்க வேண்டும், கடுமையான பயிற்சிகள் வேண்டும். ஆனால் அந்தப் பணிகளை இயக்கும் தலைமை துறைக்குக் கொலை, கொள்ளை செய்த புன்புலம் கொண்ட ஒரு மந்திரி போதும்.
  நம் மனதிற்கு இவை தவறாகத் தெரிவதில்லை, காரணம் அந்தப் படிக்காத அரசியல் சமூகம் நம்மை மூளைசலவை செய்து வைத்துள்ளது. காமராசர் படித்தவரா? கருணாநிதி படித்தவரா? எம்ஜியார் படித்தவரா?, ஜெயலலிதா படித்தவரா? அவர்கள் மக்களுக்குச் சேவை செய்யவில்லையா என்று நம்மிடம் சொல்லிச் சொல்லியே, நாட்டையாளும் பணியை சேவை என்ற போர்வையைக் கொண்டு மறைத்து, படிப்பு தேவையில்லை என்ற நிலையை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி நம்மை மாற்றிவிட்டனர்.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவே திருவள்ளுவர் கல்லாமை என்ற ஒரு தனி அதிகாரத்தையே படைத்துள்ளார். அவர் எந்த மண்ணில் இந்தக் குறள்களை எழுதினாரோ அதே மண்ணில் அவரின் குறள்களுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது.

மேற்ச்சொன்னவை ஒருபக்கம் இருந்தாலும் இன்னொருபக்கம், நாம் வீசும் காசின் அளவுக்கு ஏற்ப உடம்பை காட்டி கூத்தாடும் நடிகன் / நடிகையை நாட்டை ஆள தலைவன் / தலைவியாக ஏற்றுக்கொள்கிறோம். அஞ்சுக்கும் பத்துக்கும் கொலைகளையும்/ கற்பழிப்புகளையும் செய்த கொலைகாரர்களை அமைச்சர்/மந்திரிகளாக ஏற்றுக்கொள்கிறோம். வட்டி தொழில் செய்து பல குடும்பங்களை பாதாளத்தில் தள்ளிக் கொன்ற மாமனிதர்களை மந்திரிகளாக ஏற்றுக்கொள்கிறோம். சாராயம் காய்ச்சி இன்றும் பல பெண்களின் தாலிகளை அறுத்துக் கொண்டிருக்கும் சாராய வியாபாரிகளை நாட்டின் தலைவர் / தலைவியாக ஏற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு தகுதியில்லாவர்களையும், தொடர்பற்றவர்களையும், திறனற்றவர்களையும் தலைவர்களாகவும், நாட்டை ஆளவும் நாம் ஏற்றுக்கொண்டதன் விளைவாகத் தான் இன்று நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகிவருகிறது. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. விவசாயம் அழிந்துவருகிறது. நம் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. நாடு அன்னியர்கள் கைகளில் அகப்பட்டு சுருங்கி வருகிறது. நாடு அழிவுப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது .

கல்வியில் உயர்ந்தோனை மதியுங்கள், படித்தவர்களைத் தலைமையாகவும், நாட்டை ஆளவும் ஏற்பதே நாட்டிற்கு வீட்டிற்கு நல்லது என நாம் உணரவேண்டும். காமராசர் கதைகளைக் கேட்டு மயங்காதீர்கள் அவை உங்களை வசியப்படுத்தும் பயன்படுத்தும் வார்த்தை வித்தைகள் என்பதை உணரவேண்டும். படித்தவன் மட்டும் தவறு செய்யவில்லையா? என நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும். படிக்காதவன் சவத்திற்கு ஒப்பானவன் என்ற திருவள்ளுவன் கோட்பாட்டை மனதில் பதித்து கல்வி தகுதியில்லாமல் நாட்டை ஆளா போட்டிபோடும்  அரசியல் தலைவர்களையும், கூத்தாடிகளையும், தனிமனித ஒழுக்கம் அறவே இல்லாதவர்களை ஒதுக்கவேண்டும். இதுவே இன்றைய நாட்டின் நிலைமையை சரிசெய்ய தேவைப்படும் முதன்மையான முன்னெடுப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...